×

மாவட்டத்தில் ஏழு மாதங்களில் 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிரடி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் கடத்தல்காரர்களிடமிருந்து குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் 19 டன்( 190 குவிண்டால்) ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். டாலர் சிட்டி, குட்டி ஜப்பான் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங்,காம்பேக்டிங்,வாஷிங்,விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயமும், காங்கயம் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த தொழில்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒரிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். மேலும் இங்குள்ள நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரயில்களில் 400 க்கும் மேற்பட்டோர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றார்கள்.

இடைத்தரகர்கள் மூலம் ரயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகின்றார்கள். மேலும், சிலர் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர். இந்நிலையில், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் திருப்பூரில் சொந்தமாக தொழில்கள் செய்தும், பேக்கரிகள் வைத்தும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 208 ரேஷன் அட்டைகள் உள்ளது. இவற்றில் பெரும்பாலன ரேஷன் அட்டைகளுக்கு தமிழ்நாடு அரசால் ரேஷன் கார்டுகளுக்கு இலவசமாக ரேஷன் அரிசி வழக்கப்பட்டு வருகிறது. இவற்றை சிலர் பயன்படுத்தாமல் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், கடந்த ஆட்சி காலத்தில் ரேஷன் அரிசி கடத்தல் பெரிய அளவிற்கு இருந்து வந்தது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெறுப்பேற்ற பிறகு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் குறைந்தது. மேலும் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஐ.ஜி காமினி உத்தரவு படி கோவை மண்டல எஸ்.பி பாலாஜி மேற்பார்வையில், ஈரோடு சரக டி.எஸ்.பி. சுரேஷ் குமார், திருப்பூர் இன்ஸ்பெக்டர் மேனகா,எஸ்.ஐ. கார்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் 129 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதில் 86 வழக்குகள் அரிசி கடத்தல் தொடர்பாகவும், அரசால் மானிய விலையில் வழங்கக்கூடிய வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியாக பயன்படுத்தியதாக 43 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. அதில் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பான 85 வழக்கில் 89 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 18,949 கிலோ (190 குவிண்டால்) ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.

அதே போல் அவர்களிடமிருந்து 20 இரண்டு சக்கர வாகனம், 1 மூன்று சக்கர வாகனம், 5 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் 43 சிலிண்டர் வழக்குகளில் 43 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 47 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருவரை கள்ளச்சந்தைக்காரர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.பி பாலாஜி கூறியதாவது:
தமிழ்நாடு அரசு அரிசி கடத்தல் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொறுப்பேற்றுள்ள ஐ.ஜி காமினி, அரிசி கடத்தலை முழுவதுமாக ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் படி கடந்த காலத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.பி தமிழகம் முழுக்க 2 நபர்கள் மட்டுமே இருந்தார்கள்.

தற்போது மண்டலத்திற்கு ஒருவர் வீதம் 4 மண்டலங்களுக்கு 4 எஸ்.பிகளை நியமனம் செய்து அரிசி கடத்தலை தடுத்து வருகிறோம். அரசின் நோக்கம் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய ரேஷன் அரிசி ஏழை, எளிய மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதே ஆகும். மேலும் கோவை மண்டலத்தில் (மேற்கு மண்டலம்) அரிசி கடத்தல் தொடர்பாக 1399 வாகங்களை பறிமுதல் செய்துள்ளோம். அதில் ஆகஸ்ட் மாதத்தில் 6 (எ) அபராதம் மற்றும் பொது ஏலம் மூலம் 400 வாகனங்களை வெளியேற்றுகிறோம். இனிமேலும் தீவிரமாக வாகன தணிக்கை மேற்கொண்டு அரிசி கடத்தலை தடுப்போம். இவ்வாறு கூறினார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறிய அளவில் ரேஷன் அரிசியை கடத்தி வடமாநிலத்தவர்களுக்கும், கேரளாவிற்கும் கடத்தி செல்பவர்கள் மீது கூட கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.அதே போல் பல கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியாக பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடத்தல்காரர்கள் யாரும் தப்ப முடியாது.
இவ்வாறு கூறினார்.

ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூரில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஐ.ஜி காமினி உத்தரவுபடி, போலீசார் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ம் தேதி டி.கே.டி மில் அருகில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ கார்த்தி உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கோவை மாதம்பட்டியை அடுத்த குப்பனூரை சேர்ந்த ஜி.கார்த்திகேயன் (32) என்பவரை கைது செய்தனர். இவர் தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காா்த்திகேயனிடம் காவல் துறையினர் நேரில் வழங்கினா்.

The post மாவட்டத்தில் ஏழு மாதங்களில் 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Civilian supply crime investigation department ,Tirupur ,Civilian Criminal Investigation Department ,Dinakaran ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி